கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Jun 21, 2010

கம்ப்யூட்டரைச் சற்று கவனிப்போம்

கம்ப்யூட்டரில் தான் இனி வாழ்க்கை என்று ஆகிவரும் இந்த நிலையில், அதனை அவ்வப்போது சரி செய்து, உள்அமைப்பையும் ட்யூன் செய்வது இன்றியமை யாததாகிறது. இல்லையேல் என்றாவது ஒரு நாள், திடீரென நின்று நம்மைத் திணறடித்துவிடும்.

பலமுறை இங்கு எழுதப்பட்டது போல, பைல்கள் பேக் அப், அப்ளிகேஷன் சாப்ட்வேர் அப்டேட்டிங், ஆண்ட்டி வைரஸ் புதுப்பித்தல், பயர்வால் அமைத்தல் என்பவற்றை எல்லாம் நாம் இப்போது வழக்கமாக மேற்கொள்ள பழகிக் கொண்ச்டோம். ஆனாலும் இன்னும் பலர் சற்று சோம்பேறித்தனமாகவும், நம் கம்ப்யூட்டருக்கு அது எல்லாம் ஆகாது என்றும் போலியான தன்னம்பிக்கையுடன், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நம் அன்றாட வாழ்க்கையில், கம்ப்யூட்டருக்கென சற்று வியர்வை சிந்தி உழைக்க நாம் தயாராய் இல்லை என்பதே.

இப்படிப்பட்டவர்களுக்காக சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.

நீங்கள் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், இப்போது உள்ள விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளில், சிஸ்டமே மேற்கொள்ளும் சில விஷயங்களை, நாமாகத்தான் விண்டோஸ் எக்ஸ்பியில் மேற்கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், தானாக மேற்கொள்ளப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விண்டோஸ் எக்ஸ்பியில் நாம் தான் இதனை மேற்கொள்ள வேண்டும். எந்த ட்ரைவினை டிபிராக் செய்திட வேண்டுமோ, அதன் மீது ரைட் கிளிக் செய்து Properties, Tools, Defragment Now என்று சென்று டிபிராக் செய்திடலாம். இப்போது வரும் ஹார்ட் டிஸ்க்குகளின் கொள்ளளவு மிக அதிகமாக இருப்பதால், சிறிய ஹார்ட் டிஸ்க்குகளில் டிபிராக் செய்து கிடைக்கும் வசதிகள், பெரிய அளவில் இதில் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால், அதில் பெரிய அளவிலான கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் இருந்தால், டிபிராக் குறித்து அவ்வளாவாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

அடுத்ததாக நாம் கவனமாகச் செயல்பட வேண்டிய பிரிவு, பைல்களை பேக் அப் செய்திடும் பணி. திடீரென நாம் அவ்வப்போது பணியாற்றும் பைல்கள் கிடைக்கவில்லை என்றால் என்னவாகும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால், இவை எவ்வளவு முக்கியம் என்று உணர்வீர்கள். பேக் அப் செய்திட எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் அல்லது ட்ரைவ் இமேஜஸ் என்று போவதைக் காட்டிலும், இணையத்தில் கிடைக்கும் ஸ்டோரேஜ் தளங்களைப் பார்வையிட்டு அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பேக் அப் காப்பிகளை வைத்துப் பாதுகாக்கலாம். போட்டோ பைல்களைச் சேமிக்க பேஸ்புக் ஆல்பம், ப்ளிக்கர், பிகாஸா வெப் ஆல்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

டாகுமெண்ட் பைல்கள் என்றால், நாம் அப்போது நம் சொந்த மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தும் டாகுமெண்ட்களுக்கு அன்றாடம் பேக் அப் அவசியம். இவற்றின் அளவு ஜிபி அளவிலேயே இருக்கும். டெரா பைட் அளவிற்கு இருக்காது. எனவே இந்த பேக் அப் வசதிக்கும், ஆன்லைன் ஸ்டோரேஜ் உகந்தது.

சிஸ்டத்தில் இயங்குகின்ற அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்திடுவது இன்னொரு பாதுகாப்பான வழியாகும். சில தொகுப்புகள் தாங்களாகவே அப்டேட் செய்து கொள்கின்றன. விண்டோஸ் சிஸ்டம் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். பிரவுசர், ஆபீஸ் தொகுப்புகள், பிடிஎப் ரீடர் ஆகியவையும் அப்டேட் ஆகும். அல்லது நாம் தான் அவற்றை அப்டேட் செய்திட வேண்டும். இதனால் இவற்றிற்கு மால்வேர் தொகுப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் அனைத்தும் Automatically download and install என்ற வசதியைப் பெற்றிருக்கின்றன.

இந்த அப்ளிகேஷன்கள் அனைத்தும் அப்டேட் ஆகி உள்ளனவா என்றும் சோதிப்பது நல்லது. சில வாரங்களுக்கு முன் எழுதப்பட்ட filehippo என்ற பைலினை டவுண்லோட் செய்து இயக்கலாம். இதனை  என்ற தளத்திலிருந்து பெறலாம். இது ஒரு அப்டேட் செக்கர் பைல். அப்டேட் செய்யப்படாத அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைக் கண்டறிந்து, அவற்றிற்கான தொடர்புகளை உங்களுக்குக் காட்டும். இவற்றில் எல்லாவற்றிலும் முக்கியமானது ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் தான். இதனை அவ்வப்போது அப்டேட் செய்வது மிக மிக முக்கியம். காலக் கெடு வரை காத்திராமல், அவ்வப்போது அப்டேட் செய்திடலாம். மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், கம்ப்யூட்டர் இயக்கங்கள் முடக்கப்படுகையில், சற்றும் பதட்டப்படாமல் நம் வழக்கமான பணிகளை மேற்கொள்ள முடியும் என்பது உறுதி.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo