கவிதைகள் காண CLICK HERE, படத்துடன் கவிதைகள் காண CLICK HERE

Nov 17, 2010

வருகிறது @facebook.com மின்னஞ்சல் வசதி!

கூகுளுக்கு அடுத்து உலகில் அதிகம் பேர் பயன்படுத்தும் தளம் என்ற பெருமை இப்போது பேஸ்புக்குக்கு கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 500 மில்லியன் பயனாளர்கள் பேஸ்புக்கிற்கு உள்ளனர்.

இவர்களில் பலர் மணிக்கணக்கில், நாள் கணக்கில் பேஸ்புக்கிலேயே மூழ்கி இருக்கிறார்கள். கம்ப்யூட்டரில்தான் பேஸ்புக் பார்க்க வேண்டும் என்ற கட்டாயமில்லை இப்போது… நிறைய பேர் தங்கள் மொபைலிலேயே பேஸ்புக்கை பயன்படுத்தி, புதிது புதிதாக பெண் நண்பர்களைத் தேடுவதில் குறியாக இருப்பதைப் பார்க்க முடிகிறது!

பேஸ்புக்கின் இந்த அசுர வளர்ச்சி, பல வித இணைய சேவைகளை இலவசமாக அளிக்கும் முதல் நிலை இணைய தளமான, கூகுளுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது.

பொதுவாக இணைய தளங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்கள், அந்த தளத்தில் பயனாளர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்பதை வைத்தே தரப்படுகின்றன. அப்படிப் பார்த்தால், முதலிடத்தில் உள்ள கூகுளை விட, பேஸ்புக்கில்தான் அதிகமான நேரத்தை பயனாளர்கள் செலவிடுகின்றனர்.

இதனால் பேஸ்புக் மூலம் வருமானம் எக்கச் சக்கமாக குவிந்து கொண்டிருக்கிறது. பேஸ்புக்கும் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

இந்த போட்டியைச் சமாளிக்க பல வழிகளை யோசித்து வருகிறது கூகுள். முதல்கட்டமாக, பேஸ்புக் பயனாளர்கள் கூகுளின் சில சேவைகளை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக ஜிமெயில் தொடர்பு மின்னஞ்சல்களை ஒருமுறைக்குமேல் பேஸ்புக்கில் இறக்கிக் கொள்வதை தடை செய்தது கூகுள். இன்னும் சில மென்பொருள் சேவைகளையும் பேஸ்புக்கில் இருந்தபடியே பயன்படுத்திக் கொள்ளவும் பயனாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இப்போது கூகுளைப் போலவே பேஸ்புக்கும் இமெயில் சேவையில் இறங்கிவிட்டது.

இனி உங்கள் பெயர் @facebook.com என்று ஸ்டைலில் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக் கொள்ளலாம். இப்போதைய நிலவரப்படி, கூகுள் இமெயில் முகவரி வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பேஸ்புக்கில் உள்ளனர்.

புதிதாக பேஸ்புக் மின்னஞ்சல் வசதி கிடைக்கும் சூழலில், கூகுள் பயனாளர்கள், மின்னஞ்சலுக்காக ஜிமெயிலுக்கு போகவேண்டிய அவசியமே இருக்காது. இதன் மூலம் கூகுளின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது பேஸ்புக்.

அமெரிக்காவில் திங்களன்று துவங்கிய இணையதள கருத்தரங்கில் பங்கேற்ற பேஸ்புக் சிஇஓ ஜூக்கர்பெர்க் பேஸ்புக்கின் இமெயில் சர்வீஸை முறைப்படி அறிவித்தார்.

இதில் இன்னொரு வசதி, பேஸ்புக் மின்னஞ்சலைப் பெற பேஸ்புக் தளத்தில் உங்கள் கணக்குக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லையாம். இது தனி. வெளியிலிருந்தபடி சாட் செய்யலாம், செய்தி அனுப்பலாம், உயர்ந்த தரமான படங்கள் அனுப்பலாம்.

சுருக்கமாக சொன்னால், மெயில் சேவையில் கூகுள், யாஹூ போன்றவை தரும் வசதிகள் அனைத்தையும் பேஸ்புக்கே இனி தரப் போகிறது. மைக்ரோசாப்ட் வேர்டு டாக்குமெண்ட்களை தரவிறக்கம் செய்யாமல் அட்டாச்மெண்ட்களாகவே பார்க்கும் வசதியை பேஸ்புக் தருகிறது.

இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வர இன்னும் ஓரிரு மாதங்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.

இதற்குள், மேலும் சில புதிய மின்னஞ்சல் வசதிகளைத் தர கூகுள் திட்டமிட்டுள்ளது. அத்துடன் பேஸ்புக் போன்ற பெரிய சமூகத் தளம் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளது கூகுள். ஏற்கெனவே நான்கு சிறிய சமூக இணையதங்களை வாங்கியுள்ளது கூகுள். இவற்றை களமிறக்கி் பேஸ்புக்குக்கு ஷாக் தரத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

சர்வதேச நிலவரப்படி இணைய தரவரிசையில் கூகுள் முதலிடத்திலும், பேஸ்புக் இரண்டாம் இடத்திலும், யுட்யூப் மூன்றாவது இடத்திலும், யாஹூ நான்காவது இடத்திலும் உள்ளன.

  ©தகவல் தொழில்நுட்ப செய்திகள் - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo