01.ஊரார் வசைமொழிக்குப் பயந்து வெளிவேடம் தரித்து தர்மத்தைக் கடைப்பிடிப்பவன் தர்மவான் ஆக மாட்டான். ஒருவரும் இல்லாத வீட்டில் காணப்படும் பொன் முடிப்பை எவனொருவன் எடுத்துக்கொண்டு போக இச்சைப்படமாட்டானோ அவனே தர்மவான். மௌனமாகவும் மறைவாகவும் கடைப்பிடிக்கப்படும் தர்மமே தர்மம். வீண் பெருமையுடன் படாடோபத்துடன் செய்யப்படும் தர்மம் போலிச்செயல்களாகும்.(பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்)
02.வாக்குவாதம் செய்யாதே. உனது மதத்தினிடத்தும் கொள்கையினிடத்தும் உனக்கு எப்படிப் பற்று இருக்கிறதோ அப்படியே மற்றவர்களுடைய மதங்களிலும் கொள்கைகளிலும் அவரவர்களும் பற்று வைக்கும்படியான உரிமையை அவர்களுக்குக் கொடு. வாக்குவாதத்தினால் மட்டும் மற்றொருவனுடைய பிழையை எடுத்துக் காட்ட முடியாது.
(பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்)
03.ஒப்பிட்டுப் பார்ப்பதை மனம் நடத்திக் கொண்டிருந்தால் அங்கே உண்மையான அன்பு இருக்க முடியாது.(ஜே.கிருஷ்ணமூர்த்தி)
04.உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.
(ரால்ப் வால்டேர் எமர்ஸன்)
05.பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.(விவேகானந்தர்)
06.பொறுமையிலும் உயர்ந்த தவமில்லை. மனநிறைவிலும் உயர்ந்த இன்பமில்லை. ஆசையிலும் பெரிய தீமையில்லை. கருணையிலும் பெரிய அறமில்லை. மன்னித்தலிலும் ஆற்றல்மிக்க கருவியில்லை.(இங்கர்சால்)
07.பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. (விவேகானந்தர்)
08.சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல். அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும். (ரட்யார்ட் கிப்ளிங்)
09.உழைப்பானது நம்மைச் சூழும் கவலைகளிலிருந்தும் நம்மை அணுகும் சிறுமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் நம்மைத் தாக்கும் தீய எண்ணங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும். (கர்னல்)
10.அமைதியிலே இரண்டு வகை உண்டு. ஒன்று விவரம் தெரியாமல் இருக்கிற அமைதி. இன்னொன்று எல்லா விவரங்களையும் தெரிந்திருக்கும் அமைதி.- (அண்ணா)