மொபைலுக்கு வயது 26
மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் 3ஜி ஐ–போன் வரையில் வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது26.
ஆம், 1983ல் முதன்முதலாக மோட்டாரோலா நிறுவனத்தின் பிரிக் ("BRICK") என்ற மொபைல் போன் மூலம் வர்த்தக ரீதியான மொபைல் விற்பனைக்கு வந்தது. மொபைலில் முதன் முதல் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் உறவினரே அவர். அமெரிக்கன் மொபைல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பாப் பார்னெட் தான் இந்த அழைப்பை ஏற்படுத்தினார்.
அப்போதெல்லாம் வெகுநாட்கள் வரை பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாக மொபைல் இருந்துவந்தது. இப்போது நம் அன்றாடவாழ்க்கையின் அத்தியாவசிய சாதனமாக அமைந்துவிட்டது. 2007 ஆம் ஆண்டில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐ–போன் வடிவமைப்பிலும் இன்டர்பேஸ் இணைப்பிலும் மொபைல் போன் அதன் பயன்பாட்டில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் போன் முதன் முதலில் வந்த பின் ஓராண்டு கழிந்த பின்னர் மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பேரே இந்த சேவைக்கு வாடிக்கையாளர்களாகப் பதிந்திருந்தனர். ஆனால் இன்று அனைத்து நாடுகளிலும் கோடிக்கணக்கான பேர் மொபைல் போனைப் பயன்படுத்தி வருகின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக லேண்ட் லைன் போனை மொபைல் நீக்கிவருகிறது.
பேசுவதற்கு மட்டும் வந்த போன் இன்று டெக்ஸ்ட் மெசேஜ்களை அனுப்புவதற்கும் பெரும்பாலும் பயன்படுகிறது. இதனைத் தொடர்ந்து பெரிய அளவில் டேட்டா பரிமாற்றத்தை ஏற்படுத்த ஏற்பட்டதே இன்றைய 3ஜி மற்றும் வர இருக்கும் 4ஜி மொபைல் சேவைகள் ஆகும். இந்த புயல் வேக மாற்றங்கள் அடுத்த 25 ஆண்டுகளில் மொபைல் போனில் என்ன என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலவில்லை.